amutha malai polikirathu

சனி, 4 மே, 2013

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மிகவும் குழம்பியிருக்கிறார்கள். பலதரப்பட்ட கருத்துகள், முடிவு எடுக்கத் தெரியாத ஒரு நிலை. இவை எல்லாம் குழப்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, எப்படி அணுகுவது, யாருடைய கருத்தை நாடுவது என்று தடுமாற்றம். கடைசியில் எதையோ தேர்ந்தெடுத்து வேறு வழியில்லாமல் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கலாசாரம் என்ற பெயரில் சிறு வயதிலிருந்தே அவர்களை முடிவு எடுக்க விடுவதேயில்லை. ஒரு மாணவன் சார்பில் எப்பொழுதும் முடிவுகளை எடுப்பது தாய், தந்தையர் (அ) ஆசிரியர்கள் (அ) குடும்பத்திற்குத் தெரிந்த ஓர் அனுபவஸ்தர். சுயமாகத் தனக்கு என்ன வேண்டுமென்று முடிவு எடுக்கத் தெரியாததாலேயே குழப்பம் மென்மேலும் மேலோங்கி நிற்கிறது.

ஒரு காலகட்டத்தில் அரசு வேலை () வங்கி வேலையே சிறந்தது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணம் ஒருமுறை வேலையில் சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை பிரச்சினைகள் கிடையாது. திருமணத்துக்குக் கூட இது ஒரு முக்கியமான தகுதியாக இருந்தது. மேலும் சொந்தத் தொழில் செய்தவர்கள் எல்லோரும் ஒரு பின்னணியை நம்பி வாழ்ந்தவர்கள். வாய்ப்புகள் இருந்தன. ஆனால் குறைவு.

இன்றைக்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏராளமான துறைகள். எவ்வளவு துறைகள் இருந்தாலும் ஒரு நிறுவனத்துக்குத் தூண் போல் நிற்பது மார்கெட்டிங் துறையே. இத் துறை இல்லாத நிறுவனமே கிடையாது.
மார்க்கெட்டிங் என்பது வெறும் பொருள்களை விற்பது மட்டுமல்ல. அது ஒரு Behavior. மனிதர்களை உறவு வகையில் பொருள்களுடன் இணைக்கிறது. நாம் பிறந்த நிமிஷத்திலிருந்து நாம் நம்மை மார்க்கெட் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லா காலகட்டத்திலேயும் நம்மை மார்க்கெட் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பொருளை நாம் நம்முடன் சேர்ந்து மார்க்கெட் செய்யும்பொழுது அது மேம்பட்டு நிற்கிறது.


ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்வது மார்க்கெட்டிங் துறை ஆகும். இத் துறை ரயில் வண்டியின் என்ஜின் போல. என்ஜின்தான் மற்ற பெட்டிகளை இழுத்துச் செல்கிறது. என்ஜின் இல்லையென்றால் மற்ற பெட்டிகள் நகரச் சாத்தியமில்லை. அதேபோல் ஒரு நிறுவனத்தில் என்னதான் அக்கவுண்ட்ஸ், அட்மினிஸ்ட்ரேஷன், சட்டம், மனித உறவுகள், வாடிக்கையாளர் சேவை என்று பல துறைகள் இருந்தாலும் மார்க்கெட்டிங் என்ற என்ஜின் இல்லாமல் மற்ற துறைகள் செயல்பட வாய்ப்பில்லை.

ஒரு நிறுவனத்தின் சிறப்பை உலகத்துக்கு எடுத்துக்காட்டுவது மார்க்கெட்டிங் துறை. நிறுவனத்துக்கும் அதன் பொருள்களுக்கும் மரியாதை சேர்ப்பது மார்க்கெட்டிங். இத்துறையில் இருப்பவர்கள்தான் வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். ஆகையால் ஒரு நிறுவனத்தின் இமேஜ் பிரதிபலிக்கப்படுவதும் மார்க்கெட்டிங் துறையால்தான். மொத்தத்தில் வளர்ச்சிக்கு மூல காரணம் மார்க்கெட்டிங்தான். உலகத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் தலைவர்களாக விளங்குபவர்கள் அடிப்படையில் Marketing Professionals ஆக இருக்கிறார்கள்.

மார்க்கெட்டிங் துறை, துறையினரின் சிறப்புகள் :

சாதனைதான் வாழ்க்கை என்று இருப்பவர்கள். காலத்திற்கு ஏற்றார் போல் மாறுதல்களைத் தழுவும் சக்தி.
பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு. சவால்களை எதிர்நோக்கும்தன்மை. புதுமை செய்ய வாய்ப்புகள். விழிப்புணர்ச்சியுடன் முக்கியமான முடிவுகள் எடுக்கும் திறமை.

மார்க்கெட்டிங் வேலைவாய்ப்புகள்:

வேறு வேலை கிடைக்காததால் மார்க்கெட்டிங் துறையைத் தேர்ந்தெடுத்த நிலை மாறி மார்க்கெட்டிங்கில் வேலை செய்வது ஒரு பாக்கியம் என்ற நிலை வந்துவிட்டது. இன்று எல்லா முன்னணித் துறைகளிலும் மார்க்கெட்டிங் ஒரு மிகப் பெரிய அங்கமாக விளங்குகிறது.
ஓர் உதாரணத்துக்கு வங்கிகளை எடுத்துக் கொள்வோம். வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு ஓடிச் செல்லும் நாள்கள் போய், இன்று வங்கிகள் வாடிக்கையாளர்களை நோக்கிச் செல்கின்றன. இதைச் செயல்படுத்துபவர்கள் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள்.
இன்று சாஃப்ட்வேர், வங்கிகள், எம்எம்சிஜி, ஆபீஸ் ஆட்டோமேஷன், நிதி, இன்ஷூரன்ஸ், சிறுதொழில்கள் மற்றும் பலதரப்பட்ட துறைகளிலும் மார்க்கெட்டிங் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் மார்க்கெட்டிங் இல்லாமல் இந்த நிறுவனங்களே இல்லை.

மார்க்கெட்டிங் சார்ந்த சிறப்புப் பயிற்சிகள்:

இத்துறையைச் சார்ந்த பல சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதில் தலைசிறந்து விளங்குவது எம்பிஏ. அடிப்படையில் எம்பிஏ பல சிறப்புகளுடன் வழங்கப்படுகிறது. அதில் மிகவும் கிராக்கி இருப்பது எம்பிஏ மார்க்கெட்டிங்குக்குத்தான்.
காரணம் என்னவென்றால் இந்தப் பயிற்சியில் பாடம் கற்பிப்பது மட்டுமன்றி பல வியாபார நுணுக்கங்களை நடைமுறைப்படுத்தி, அதை கேஸ்கள் மூலமாக ஆராய்ச்சி செய்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கிறார்கள். இந்தப் பயிற்சியின் முடிவில் ஒரு முழு Professional வியாபாரத்தை நடத்தத் தயாராகிறார்கள். பல நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் எம்பிஏ பயிற்சி அளித்தாலும் IIM, XLRI  போன்ற பயிற்சிகள் மேலோங்கி நிற்கிறது. இது தவிர எல்லா அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிலும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது இருவிதமாக வழங்கப்படுகிறது. 2 ஆண்டு முழு நேர பயிற்சி மற்றும் 3 ஆண்டு பகுதி நேர பயிற்சி அடிப்படையில் இந்தப் பயிற்சிகளைச் செய்வதற்குப் பட்டதாரியாக இருக்க வேண்டும். இது இல்லாமல் பல நிறுவனங்களில் ஓராண்டு டிப்ளமா படிப்பு வழங்கப்படுகிறது.

பிற தகுதிகள்:

* தன்னம்பிக்கை ஓங்கி இருக்க வேண்டும்.
* செய் அல்லது செத்து மடி என்ற மன உறுதி வேண்டும்.
* பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதற்கான ஆர்வம் வேண்டும்
* தகவல்தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக எது செய்தாலும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி, உத்வேகம் உள்ளூரத் தீயாகப் பரவ வேண்டும்.

முடிவில்லா ஆரம்பம்:

மாணவர்களே, எதிர்காலம் உங்கள் கையில். உங்களை நம்புங்கள். உங்கள் திறமையை நம்புங்கள். உங்களிடம் எல்லாம் இருக்கிறது. சாதிப்பதற்கு என்றே பிறந்தவர் நீங்கள். தன்னை உணர்ந்தவர்கள் கடவுளை உணர்ந்தவர்கள் ஆவர்.
செய்யும் தொழிலே தெய்வம். மார்க்கெட்டிங் உங்களைப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. உங்கள் நிறை, குறைகளை ஆராய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. என்னால் முடியும் என்ற உணர்வும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது. அதை உலகுக்குப் படம் போட்டுக் காண்பிக்க வேண்டும். மார்க்கெட்டிங் உங்கள் உணர்வுகளையும் திறமைகளையும் உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும்.
எந்தத் துறையிலும் நீங்கள் சிறந்து விளங்கலாம். நீங்கள் மார்க்கெட்டிங்கைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கும் உங்கள் சாதனைகளுக்கும் உலகளவில் அங்கீகாரம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துறைக்கு ஓய்வு என்பதே கிடையாது.
நான் ஒரு பயிற்சி நடத்திக் கொண்டிருந்த போது 78 வயதுப் பெண்மணி பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தார். அவர் என்னிடம், என் வாழ்க்கையை மீண்டும் துவங்க விரும்புகிறேன். ஏதாவது ஒரு பொருளை மார்க்கெட் செய்ய வேண்டும். நம்பிக்கை இருக்கிறது என்றார். வயதுவரம்புகளைக் கடந்தது மார்க்கெட்டிங் துறை.
சில பேர் சாதனைகளைப் படைத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றும் சிலர் மற்றவர்கள் சாதிப்பதைப் பார்த்து வியந்து போவார்கள். இன்னும் பலர் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.
வாழ்க்கையில் வெற்றி அடைந்து இன்றும் முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நபரும் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்கள். மார்க்கெட்டிங் துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் நிரந்தரமாக முதல் ரகத்தைச் சார்ந்தவர்களாக விளங்குவார்கள்.

0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்