amutha malai polikirathu

திங்கள், 13 ஏப்ரல், 2015


அயல்கிரகவாசிகளை பற்றிய பட்டிமன்றம் கடந்த சில மாதங்களாகவே உலக அறிவியல் அரங்கில் சூடுபிடித்து இருக்கிறது. இதில் இன்னும் சூடேற்றியிருக்கிறார் அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் தலைமை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபான். மனிதர்கள் வசிக்க உகந்த கிரகங்களையும், வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா என்பதை பற்றியும் செவ்வாயன்று நடந்த ஒரு கருத்தரங்கில், 'பூமிக்கு அப்பால் உயிர்கள் இருக்கிறதா என்பதை பற்றி இன்னும் பத்து ஆண்டுகளில் அறிகுறிகள் தெரிந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குள் திட்டவட்டமான ஆதாரங்களும் கிடைத்துவிடும்' என்று எல்லன் தெரிவித்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. 'எங்களுக்கு எங்கே தேடவேண்டும்; எப்படி தேடவேண்டும் என்பது தெரியும். அதற்கு தேவையான பெரும்பாலான தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கிறது. அவற்றை களமிறக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் நிச்சயம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்' என்று அழுத்தம் திருத்தமாக எல்லன் பேசியிருக்கிறார்.

இந்த அகண்ட பேரண்டத்தில், பூமியை ஒத்திருக்கும் பல கிரகங்கள் இருப்பது நமக்கு பல ஆண்டுகளாகவே தெரிந்ததுதான். உதாரணத்திற்கு, சனி கிரகத்தின் துணை கிரகமான என்செலாடசில் நீர் இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் வந்தபடி இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் முன் உப்பு நீர் கடல் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
2020ல் நாசா, அடுத்த செவ்வாய் ஆராய்ச்சி வாகனத்தை அனுப்பவிருக்கிறது. செவ்வாயில் முன் உயிர்கள் இருந்தனவா என்பதை ஆராய்ந்து, செவ்வாயின் மண், கல், நீர் குறித்த ஆதாரங்கள் போன்றவற்றை பூமிக்கு திரும்ப எடுத்துவரும் வகையில் அந்த வாகனம் வடிவமைக்கப்படவிருக்கிறது. இதையடுத்து, 2030ல் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

மனிதர்கள் வாழ ஏற்ற வேறு கிரகம் தேடுவதில் வெற்றி கிடைக்கும் என்பதை ஏற்கும் விஞ்ஞானிகள்கூட, வேற்று கிரகவாசிகள் இருப்பதை மறுத்து வருகின்றனர். தவிர, வேற்றுகிரகவாசிகளை பிடித்து வைத்து ஆராய்ச்சி செய்தது என்பது போன்ற 'சதி கதைகள்' பல உலவும் நிலையில், தலைமை விஞ்ஞானியே இப்படி அறிவித்திருப்பது விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக நம்பும் முகாம், இப்போது, 'நாங்க அப்பவே சொல்லல?' என்று ஹை பைவ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்